இலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு

Sharing is caring!

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கு முன்னதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை முழுமையாக இலங்கை அணி கைப்பற்றியது. ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா அணி முழுமையாக கைப்பற்றியது.

இந்நிலையில், அடுத்ததாக நடைபெறும் ரி-20 தொடர் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில், இத்தொடருக்கான தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் போட்டியில் மட்டும் அணித்தலைவர் டு பிளெஸிஸ், குயிண்டன் டி கொக், இம்ரான் தஹீர் மற்றும் கார்கிஸோ ரபாடா ஆகியோர் விளையாடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ரி-20 போட்டிகளுக்கு ஜே.பி.டுமினி அணித்தலைவராக செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டிகளில் கிறிஸ் மோரிஸ் மற்றும் லுதா சிம்பாலா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஷிம் அம்லா, குடும்ப சூழ்நிலைக் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார்.

20 வயதான துடுப்பாட்ட வீரர் சைனெந்தெம்பா கியூசெய்ல் இத்தொடரில் அறிமுகமாகிறார்.
சரி தற்போது முதலாவது ரி-20 போட்டிக்கான அணி விபரத்தை பார்க்கலாம்,

டு பிளெஸிஸ் தலைமையிலான அணியில், குயிண்டன் டி கொக், ஜே.பி.டுமினி, ரீஸா ஹென்ரிக்ஸ், இம்ரான் தஹீர், எய்டன் மார்க்கிரம், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, எய்ன்ரிச் நோர்ட்ஜ், என்டில் பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், கார்கிஸோ ரபாடா, டேல் ஸ்டெயின், ராஸ்ஸி வெண்டர் டஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜே.பி.டுமினி தலைமையிலான அணியில் ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், எய்ன்ரிச் நோர்ட்ஜ், என்டில் பெலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், சைனெந்தெம்பா கியூசெய்ல், டப்ரைஸ் சம்ஸி, லுதோ சிம்பாலா, டேல் ஸ்டெயின், ராஸ்ஸி வெண்டர் டஸன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி கேப்டவுண் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares