மாற்றுத் தலைமையுடன் விக்கி தலைமையில் வலுவான அணி தேர்தலில் களமிறங்கும் – சுரேஸ்

Sharing is caring!

பல கட்சிகள் இணைந்ததான ஒரு புதிய கூட்டு உருவாக்கப்பட்டு மாற்றுத்தலைமையுடன் கூடிய வலுவான அணியொன்று கட்டியமைக்கப்படுமென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த அணி, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாற்றுத் தலைமை குறித்து ஊடகங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு தற்போது இருக்கின்ற தலைமையின் மீது மக்களுக்கு நம்பிக்கையற்றுப் போயிருக்கின்றது. இந்நிலையில் மக்கள் தங்களுக்கான சரியான தலைமையை தெரிவு செய்துகொள்ள வேண்டுமென்றும்.

மாற்றுத் தலைமை வேண்டுமென்ற எங்களது நிலைப்பாட்டில் நிச்சயமாக முன்னேற்றங்கள் இருக்கின்றது. ஒரு பொதுவான வழியில் பல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு போவதற்கு சி.வி.விக்னேஸ்வரன் அவர் தயாராக இருக்கின்றார். நாங்களும் அவருடன் இணைந்து செயற்படுகின்றோம்.

தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கின்றது. இன்றைக்கு இருக்கின்ற அரசியல் சூழ்நிலைகளுக்குள்ளே விக்னேஸ்வரன் உருவாக்கியுள்ள கூட்டு பலமான கூட்டாக விரிவடைவதற்கான சாத்தியப்பாடுகள் நிறையவே இருக்கின்றது. அது தேர்தலுககு முன்பாகவே பலம்மிக்க கூட்டமைப்பாக மாறுமென்று நான் எதிர்பார்க்கின்றேன்.

இதுவொரு தேர்தல் ஆண்டு. ஆகவே தங்களுக்கு ஏற்ற சரியான தலைமைத்துவத்தை மக்கள் தான் தெரிவுசெய்ய வேண்டும். இந்தப் போராட்டமென்பது ஜனநாயக ரீதியான போராட்டம்.

அத்துடன் தேசிய இனப்பிரச்சனை, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி என்பவற்றை சமாந்தரமாக முன்னெடுத்துச் செல்வது எவ்வாறு என்ற விடயங்களைக் கையாளக் கூடியவர்களை பொதுமக்கள் இணங்கண்டு அவர்களைத் தெரிவு செய்யவேண்டிய ஒரு காலகட்டம் தற்போது இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares