மட்டக்களப்பில் காணாமற்போயிருந்த விவசாயி சடலமாக கண்டெடுப்பு – மூவர் கைது

மட்டக்களப்பில் காணாமற்போயிருந்த விவசாயி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமற்போன விவசாயியான கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (வயது 62) என்பவரே, நேற்று (திங்கட்கிழமை) இரவு கைகள் கட்டப்பட்ட நிலையில் மதகு ஒன்றினுள் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற  சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

றாணமடு மாலையர்கட்டு வயல் பிரதேசத்தில் தனது வயலுக்குச் சென்ற மத்திய முகாம் 11ஆம் பிரிவைச் சேர்ந்த  குறித்த விவசாயி காணாமற்போயிருந்தார்.

பொலிஸ் முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது குறித்த பகுதியில் உள்ள வாய்க்கால் மதகு ஒன்றிலிருந்து விவசாயியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இச்சம்பவம், காணி விவகாரத்தால் ஏற்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே, குறித்த விவசாயின் மருமகன் இச்சம்பவம் குறித்து சாட்சியளித்த நிலையில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் இடம்பெற்றுவருகின்றன.

உயிரிழந்த விவசாயியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *