பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தும் விதம் என்னை ஈர்த்துள்ளது: விமானி அபினந்தன் தகவல்

பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தும் விதம் என்னை ஈர்த்துள்ளது என விமானி அபினந்தன் தகவல் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள  எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை தகர்த்தெறிந்தது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இன்று இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்போது நடந்த சண்டையில் இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம் பாகிஸ்தான் பகுதி எல்லையோரக் கிராமத்தில் கீழே விழுந்துள்ளது.

அதில் இருந்த விமானி அபினந்தன் வர்தன் என்பவரைப் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. முதலில் இந்திய விமானம் கீழே விழுந்ததும் அந்தப் பகுதி கிராம மக்கள் விமானி அபினந்தனை தாக்க முயன்றனர். அவர்களிடமிருந்து விமானியைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீட்டு கைது செய்தனர். இந்தப் புகைப்படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தனக்கு அளித்துள்ள பாதுகாப்பு குறித்து விமானி அபினந்தன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், விமானியிடம் பாகிஸ்தான் ராணுவத்தினர் கேள்வி எழுப்புவதும், அதற்கு அவர் பதிலளிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, முதலில் அவர் பெயர் என்ன உள்ளிட்ட விவரங்களைக் கேட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம் எனக் கேட்க, அதற்கு “ஆம், இங்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். நான் இப்போது சொல்லும் கருத்துகளை இந்தியா சென்ற பிறகு மாற்றிக் கூற மாட்டேன். என்னைப் பாகிஸ்தான் ராணுவத்தினர் நன்றாகவே நடத்துகிறார்கள். என்னை விபத்திலிருந்து மீட்ட வீரர்கள், கேப்டன் என அனைவரும் நன்றாகவே நடத்தி வருகிறார்கள்.

இதைத்தான் இந்தியா ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்தும் விதம் என்னை ஈர்த்துள்ளது. நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவன். எனக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது’’ என்றார். தொடர்ந்து அவரிடம், உங்கள் விமானம் என்ன; என்ன பணிக்காக வந்தீர்கள் எனப் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கேட்க அதற்குப் பதில் கூற அபினந்தன் மறுத்துவிட்டார் .

விமானியை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல்: இதற்கிடையே, சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானியை பாகிஸ்தான் உடனடியாக விடுவிக்க வேண்டும், விமானியை துன்புறுத்தக்கூடாது  என டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்திய விமானி குறித்த வீடியோ காட்சிக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *